Friday, December 17, 2010

கிராமத் தலைவராக பிச்சைக்காரர் தேர்வு

படோன்(உத்தரப்பிரதேசம்),டிச.16:வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளை இனியும் நம்பி மோசம் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள். தங்களுக்குப் பணியாற்ற பிச்சைக்காரர் ஒருவரை கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்த்தியுள்ளனர்.

இந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பிச்சைக்காரரும் ஒருவர். நாராயண் நாத் என்ற இவரையே கிராமத் தலைவராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார் நாராயண் நாத். இவருக்கு நான்கு மகன்கள், 14 பேரக் குழந்தைகள். கடந்த மாதம் நடந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்ற போதிலும் இப்போதும் பிச்சையெடுத்துதான் வாழ்ந்து வருகிறார்.

கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஒரு காசு கூட இவர் செலவு செய்யவில்லை. கிராமத்தை முற்றிலுமாக மாற்றிவிடுவதாக இவர் அளித்த வாக்குறுதிதான் மக்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.

கிராம மக்கள் மேம்பாட்டுக்கு, அரசு ஒதுக்கும் அனைத்து நிதியையும் செலவிடப் போவதாக அறிவித்துள்ளார் நாராயண் நாத். கிராமம் முழுவதும் மகளிர்க்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தருவதே தனது முதல் பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச கிராமத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய அரசியல் மாற்றம் வெகு விரைவில் பிற பகுதிகளுக்குப் பரவினால் நல்லது ஏற்படுவது நிச்சயம். மக்களின் இத்தகைய மனமாற்றம் வெறும் வார்த்தை ஜாலங்களைக் காட்டி வாழ்க்கை ஓட்டும் அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பது உறுதி.

தினமணி

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza