Friday, December 10, 2010

இந்தியத் தூதருக்கு அமெரிக்காவில் அவமதிப்பு!

வாஷிங்டன்: இந்தியப்பெண் தூதர் ஒருவர் அமெரிக்காவில் அவமானப் படுத்தப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாரம்பரிய சேலை அணிந்து சென்ற அமெரிக்காவுக்கான இந்திய தூதரை மிசிசிப்பி விமான நிலைய அதிகாரிகள் சோதனை  செய்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர். இவர் மிசிசிபி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின்னர் பார்லிடிமோர் செல்வதற்காக, ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார். மீராசங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார்.  அப்போது அங்குள்ள அதிகாரிகள் மீராசங்கரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். தான் ஒரு தூதர் என்று மீராசங்கர் மற்றும் அவருடன் சென்றிருந்தவர்கள் எடுத்துக்கூறியும், சமாதானம் அடையாத அதிகாரிகள், சாதாரண பயணிகளை நடத்துவதைப்போல் சோதனையிட்டனர்.
விமானத்தில் செல்லும் சாதாரண பயணிகள் உடைகளுக்குள் ஏதாவது சந்தேகத்துக்கு இடமான பொருட்களை மறைத்து வைத்துள்ளனரா என கைகளால் தடவி பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும். இதேபோல், மீராசங்கரை வி.ஐ.பி. வெயிடிங் அறைக்கு அழைத்துச் சென்று பெண் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஜாக்சன் ரோவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் முழு உடம்பையும் ஸ்‌‌கேன் செய்யும் மிஷின்கள் இல்லாததால், மீரா இந்த மாதிரியான ‌சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயர் அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த இந்த சோதனை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியத்தூதர் சேலை அணிந்திருந்ததால் சோதனை நடத்தப்பட்டதாக மீராசங்கர் உடனிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
செய்தி:இந்நேரம் 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza