Saturday, December 11, 2010

நிவாரண கப்பல் தாக்குதல்:துருக்கியிடம் மன்னிப்புக்கோர இயலாது - இஸ்ரேல் திமிர்

ஜெருசலம்,டிச.11:காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையினால் அவதியுறும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட கப்பலை காஸ்ஸாவிற்கு அருகில் வைத்து தடுத்து நிறுத்தி கப்பலிலிருந்த துருக்கியைச் சார்ந்த ஒன்பது மனித உரிமை ஆர்வலர்களை கொடூரமாக சுட்டுக்கொன்ற நடவடிக்கைக்கு துருக்கியிடம் மன்னிப்புக்கோர இயலாது என இஸ்ரேல் திமிர்தனமாக பதிலளித்துள்ளது.

மன்னிப்புக்கோரினால் சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் இத்தகையதொரு தீர்மானம் எடுத்ததாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டானி அய்லோன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பிறகு மோசமான தூதரக உறவை புனர் நிர்மாணிப்பதற்காக இஸ்ரேல் துருக்கிக்கு பிரதிநிதிக் குழுவை அனுப்பியுள்ளது.

நிவாரணக் கப்பலை இஸ்ரேல் ராணுவம் தாக்கியதற்கு காரணம் சுய பாதுகாப்புதான் என்ற இஸ்ரேலின் நிலைப்பாட்டை மீண்டும் தெரிவித்தார் அய்லோன்.

கடந்த மே மாதம் நடந்த இந்த தாக்குதலுக்காக இஸ்ரேல் மன்னிப்புக்கோர வேண்டும், இழப்பீடு வழங்கவேண்டும் என்பது துருக்கியின் கோரிக்கை.

காஸ்ஸாவின் மீதான இஸ்ரேலின் தடையை வாபஸ்பெற வேண்டும் என நேற்று முன்தினம் துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் வலியுறுத்தியிருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza