Friday, December 17, 2010

திருக்குர்ஆனுக்கு அவமதிப்பு:போராட்டம் நடத்திய 36 முஸ்லிம் இளைஞர்கள் கைது

மும்பை,டிச.16:மும்பை அந்தேரி சாகினாகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரிண்டிங் பிரஸ்ஸை நடத்தி வருகிறார் டபிள்யூ.போஸ்கோ என்பவர். இவர் திருக்குர்ஆன் பிரதியின் மீது வைன் மதுபானத்தை வைத்து அருந்தியுள்ளார்.

திருக்குர்ஆனை இவ்வாறு அவமதித்த தகவல் கிடைத்தும் போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறி முஸ்லிம் இளைஞர்கள் சாகினாகா போலீஸ் நிலையத்திற்கு முன்னால் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போலீஸார் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் போலீஸார் மீது முஸ்லிம் இளைஞர்களில் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து 36 முஸ்லிம் இளைஞர்களை போலீசார் கைதுச் செய்துள்ளனர். கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாகினாகா போலீஸ் நிலையம் இதுக்குறித்து கூறுகையில், திருக்குர்ஆனை அவமதித்த சம்பவம் செவ்வாய்கிழமை 5.30க்கு நடந்தது. ஆனால், 8.30 க்கு போலீஸ் போஸ்கோவின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்துவிட்டது. ஆனால், யாரோ போஸ்கோவின் மீது போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற வதந்தியை பரப்பியதால் மக்கள் போலீஸ் ஸ்டேசன் முன்னால் இரவில் கூடி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் இரண்டு போலீசாருக்கு காயமேற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இதுவரை அவர்கள் கண்டறியப்படவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு வருகைபுரிந்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆரிஃப் நஸீம் கான் அப்பாவிகளை கைதுச் செய்யக்கூடாது என போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இப்பகுதியின் உலமாக்கள், இமாம்கள், முஸ்லிம் சமுதாயத்தின் மதிப்புமிக்கவர்களை சந்தித்து உண்மையில் என்ன நடந்தது? என்பதைக் குறித்து விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.

துணைபோலீஸ் கமிஷனரிடம் இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கவும், வெள்ளிக்கிழமை ஆஷூரா தினத்தை மக்கள் அமைதியாக கடைபிடிக்கவும் வழிவகுக்குமாறும் உத்தரவிட்டார்.

செய்தி:twocircles.net

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza