இந்திய கம்யூனிஸ் கட்சித் தலைவர் நல்லகண்ணு அயோத்தி தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்துள்ளது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்றும், முஸ்லிம்களின் அமைதி என்பது புயலுக்கு முன் அமைதி என்றும் நல்லகண்ணு பேசியுள்ளது கம்யூனிஸத்தின் உண்மை சொரூபத்தை வெளிக்காட்டுகிறது.
கடந்த 60 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர் முஸ்லிம். தொல்லியல், தொல்பொருள், ஆவணங்கள் சரிபார்க்கும் அனைத்து பிரிவுகளிலும் முஸ்லிம்கள் 40% இருந்துள்ளனர். அனைத்து விதமான சாட்சிகளையும் தீர விசாரித்து ஆதாரங்களின் அடிப்படையில் அயோத்தியில் இருந்தது ராமர் கோயில், அந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று நல்லகண்ணு கூறியுள்ளது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். முஸ்லிம்களைத் திசை திருப்ப நல்லகண்ணு முயற்சி செய்துள்ளார். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இதுவரை பேசி வந்தவர் இன்று நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு ராமகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
NEWS - INNERAM.COM
0 கருத்துரைகள்:
Post a Comment