ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத் லெபனானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் நஜாதிற்கு உற்சாக வரவேற்பை அளித்தனர் லெபனான் மக்கள்.

முதன்முதலாக லெபனானுக்கு செல்லும் நஜாதை வரவேற்க விமான நிலையம் முதல் அதிபரின் மாளிகை வரை வழியோரங்களில் நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் கூடியிருந்தனர். அதிபர் மாளிகைவரை திறந்த ஜீப்பில் சென்ற நஜாதை மக்கள் பூச்செண்டுக் கொடுத்து வரவேற்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான், பிரதமர் ஸஅத் ஹரீரி ஆகியோரை நஜாத் சந்தித்து பேசுவார். அதேவேளையில், ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வுடனான சந்திப்பைத்தான் உலகம் உற்று நோக்குகிறது.

இஸ்ரேலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஹிஸ்புல்லாஹ் மேற்கத்திய நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறது.

2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த போரில் ஹிஸ்புல்லாஹ்வுக்குத்தான் வெற்றிக்கிடைத்தது. இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட பின்த் ஜுபைல், கன ஆகிய இடங்களுக்கும் நஜாத் செல்கிறார். ஹிஸ்புல்லாஹ் வலுவான நகரங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், நஜாதின் வருகையில் மேற்கத்திய ஆதரவாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்புள்ளதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

லெபனான் அதிபருடனான உரையாடலின் போது அமெரிக்க அரசு நஜாதின் வருகைக் குறித்து கவலைத் தெரிவித்திருந்தது.