Monday, October 11, 2010

அணுசக்தியைக் குறித்த பேச்சுவார்த்தை இந்த மாதம் கடைசியில் - ஈரான்

டெஹ்ரான்,அக்.11:ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் குறித்த பேச்சுவார்த்தை 6 பெரிய நாடுகளுடன் இந்த மாத கடைசியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ நடைபெறும் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மனுஷேர் முத்தகி தெரிவித்துள்ளார். ஆனால் எந்த இடம் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வைத்துத்தான் இத்தகவலை முத்தகி வெளியிட்டார். பேச்சுவார்த்தை பெரும்பாலும் வியன்னா அல்லது ஜெனீவாவில் வைத்து நடைபெறலாம் என மேற்கத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டால், தேதி என்பது பிரச்சனையே அல்ல என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்துள்ளார்.

ஐந்து ஐ.நா நிரந்தர உறுப்பு நாடுகளுடனும் (அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்சு) ஜெர்மனியுடனும் கடந்த ஆண்டு அக்டோபரில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் குறித்த பேச்சுவார்த்தை ஸ்தம்பித்துப் போனது.

தொடர்ந்து கடுமையான தடைகள் ஈரான் மீது விதிக்கப்பட்டன. ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தேதி நிர்ணயிக்கப்படவில்லை என ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை தலைவர் காதரின் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக கொள்கை பரிமாற்றம் ஒன்றும் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டம் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முகமூடி என அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஆனால், ஈரானோ மின்சாரத்தின் தேவைக்காகவே அணுசக்தி திட்டம் எனக் கூறிவருகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்த ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் சில நிபந்தனைகளை விதித்திருந்தார்.

இதர நாடுகளையும் பேச்சுவார்த்தையில் உட்படுத்தவேண்டும். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளின் விருப்பம் நட்பா?பகையா? என தெளிவுப்படுத்த வேண்டும்.

இஸ்ரேலின் அணுஆயுத சேகரிப்புகளைக் குறித்து தங்களது அபிப்ராயங்களை வெளியிட வேண்டும். ஆகிய நிபந்தனைகள்தான் அவை.

இதற்கிடையே, ஈரானின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்க முயன்ற மேற்கத்திய உளவாளிகளை துரத்தியதாக அலி அக்பர் ஸாலிஹி தெரிவிக்கிறார். ஏற்கனவே ஆசை வார்த்தைகளை காட்டி ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு மேற்கத்திய நாடுகள் வலைவீசின. அவர்களிடமிருந்து சில விபரங்களை உளவறிந்தனர். ஆனால், அத்தகைய முயற்சிகளை தடுத்ததாக ஸாலிஹி தெரிவிக்கிறார்.

செய்தி : பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza